சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா. இவரது 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அதிபர் ஹலிமா கடந்த மே மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.
இதனால் சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது ராஜினாமா அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார்.
இவர் கடந்த 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். இவரது தாத்தா, பாட்டி ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள். சண்முகரத்னத்தின் தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவரது மனைவி ஜேன் யுமிகோ இடோகி. முன்னாள் வழக்கறிஞரான இவர் சமூக சேவகியாகவுள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.
சண்முகரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்கத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் சண்முகரத்னம் தனது பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.