தமிழ்நாட்டில் எப்படியாவது வேரூன்றி கிளை பரப்ப திட்டமிட்டு பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது.
அதற்கான மற்றும் ஒரு நிகழ்ச்சி தான் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை. இதை தவறாக கருதக் கூடாது.
ஏற்கனவே வேல் யாத்திரை நடத்திய முருகன் மத்திய மந்திரியாகி விட்டார். அண்ணாமலைக்கு எந்த பதவி காத்திருக்கிறதோ தெரியவில்லை .
அதே சமயம் ஏன் ராமநாதபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள். இத்தனைக்கும் அங்கு அதிமுகவினர் உதவி இல்லாமல் அங்கு யாரும் ஜெயிக்க முடியாது என்று கூட கே.பி .முனுசாமி சமீபத்தில் கூட கூறியிருந்தார்.
ஆனால் ராமநாதபுரத்திற்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் தருவதற்கு என்ன காரணம்.
இங்கு அவர்கள் ஆட்சியில் ஜனாதிபதியான அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. அதுமட்டுமா இந்தியாவிலேயே பெரிய சூரிய மின் சக்தி தயாரிக்கும் அதானியின் நிறுவனம் உள்ளது.
இதைத் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு சேது சமுத்திரத் திட்டம் முன்பு உருவாக்கப்பட்டு பின்னர் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு விட்டது .
ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் மீண்டும் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே புதிய பாலமே அமைக்க போகிறோம் என்று அறிவித்துள்ளனர் .
சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடு திருத்தி வீதி சமைப்போம் என்று மகாகவி பாரதியார் முன்பு பாடி இருந்தார் .
இப்போது சேது சமுத்திரத் திட்டத்தை விட்டுவிட்டு பாலத்துக்கு வந்து விட்டார்கள்.
இந்தப் பாலம் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் அமைய இருக்கிறது.
இடையிடையே மூன்று மீட்டர் ஆழத்தில் ஆங்காங்கு மணல் திட்டுகள் உள்ளன. எனவே தூண்கள் அமைத்து பாலத்தை கட்ட ஆய்வு நடந்து வருகிறது .
இதற்கு இலங்கை அரசும் தலை சாய்த்து விட்டது. அதுவும் சீனா ஆதரவாளரான மஹிந்த ராஜபக்சே போன பிறகு இந்தியா ஆதரவாளரான ரணில் விக்கிரமசிங்க வந்து விட்டதால் இந்த பேச்சு இப்போது தீவிரமாகியுள்ளது.
இந்த பாலம் வாகனங்கள் மட்டும் செல்வதற்கான பாலம் அல்ல.
இதில் ரயில் தண்டவாளமும் இருக்கும் .
முன்பு வெள்ளையர் ஆட்சி காலத்தில் சென்னையிலிருந்து கொழும்புக்கு போட் மெயில் என்ற ஒரு ரயில் ஓடியது அந்த ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்ததும் அங்கிருந்து படகில் ஏறி தலைமன்னார் சென்று பின்னர் அங்கிருந்து ரயிலில் ஏறி கொழும்பு செல்வார்கள்.
சென்னையில் டிக்கெட் எடுத்தால் கொழும்புக்கு சென்று விடலாம் .
அந்த ஏற்பாட்டில் இப்போது சென்னையில் இருந்து நேரடியாகவே ரெயில் மூலமாக கொழும்பு செல்லும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
இது மட்டுமல்ல இந்த பாலத்தின் அடியில் கொழும்புக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கான கேபிள் அமைக்கப்படும். எரிவாயு கொண்டு செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும் தொலைதொடர்பு கேபிள்கள் இணைக்கப்படும்.
ஆக ஒரு பாலத்தால் பல்வேறு வகையில் இந்தியாவும் இலங்கையும் பொருளாதார ரீதியாக இணைக்கப்படுகிறது.
இலங்கையின் திட்டங்களுக்கு கடன் கொடுத்து கொடுத்து கந்து வட்டிக்காரன் போல் சீனா செயல்பட ஆரம்பித்த பிறகு இந்தியா தான் அவ்வப்போது உதவி செய்து இலங்கையின் பொருளாதாரம் செய்யாமல் காப்பாற்றி வருகிறது.
அதன் ஒரு கட்டமாகவே இந்த பாலம் அமைவதை பார்க்க வேண்டும்.
அதுவும் தமிழர் பகுதியில் தான் இந்த இணைப்பு நடக்கிறது .
ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் விமான போக்குவரத்து தொடங்கிவிட்டது.
படகு போக்குவரத்தும் தொடங்க இருக்கிறது. கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று இருக்கிறது. இவற்றையெல்லாம் விட முக்கியமான காரணம் மற்றொன்று இருக்கிறது. அதாவது சீனாவிடம் போக இருந்த மற்றொரு விஷயம் இது .
தலைமன்னாரே ஒட்டியுள்ள நைனா தீவு உள்பட சில தீவுகளில் மரபுசாரா எரிசக்தி தயாரிக்க அதாவது காற்றாலை மின்சாரம்/ சூரிய சக்தி மின்சாரம் போன்ற மின் உற்பத்தி ஆலைகளை அமைக்க இந்தியாவுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது .
இவற்றின் பாதுகாப்புக்கு இந்திய ராணுவம் படைகளை அங்கு அங்கு நிறுத்தும் வகையில் ஒப்பந்தமும் செய்யப்பட்டு உள்ளது .
இதிலும் ஒரு முக்கியமான பின்னணி என்னவென்றால் அந்த மின்சார உற்பத்தி ஆலைகளை அமைக்க போவது அதானி நிறுவனம் தான்.
ஏனென்றால் இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க உலகளாவிய டெண்டர் விடும் முறையை இலங்கை பின்பற்ற முடிவு செய்திருந்தது .
ஆனால் இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக அது மாற்றப்பட்டு விட்டது.
இந்த பின்னணிகளை கூட்டி கழித்துப் பார்த்தால் பாரதிய ஜனதா கட்சி ஏன் ராமநாதபுரத்திற்கும் அதை உள்ளடக்கிய இராமேஸ்வரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது .
பாதயாத்திரையை குமரியில் தொடங்காமல் ராமநாதபுரத்தில் ஏன் தொடங்குகிறார்கள். உள்துறை மந்திரியே அங்கு வந்து செல்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.