சென்னை: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். நாளை ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பழனிசாமியை அழைத்தபோதும் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

அதிமுக -பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் நீடிக்கிறது:

எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு மூலம் அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் நீடிப்பது உறுதியாகியுள்ளது. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை தெரிவித்த கருத்து உள்ளிட்ட காரணங்களால் அதிமுகவினர், பா.ஜ.க.வினர் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் ஜெயலலிதா பற்றிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்