மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமின்றி, அந்த சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இவ்வாறு இனவெறி தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்எல்ஏ-க்களில் ஒருவர் 2 மாதங்களாக மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருப்பது தெரியவந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் வங்குசாஜின் வால்டே. 61 வயதான இவரால் தற்போது எந்த துணையும் இன்றி அசைய கூட முடியாது. குரலை இழந்து பேசவும் முடியாமல் மருத்துவமனையில் தவித்து வருகிறார் குக்கி கிறிஸ்துவ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கிற்கு பழங்குடிகள் தொடர்பான ஆலோசகராகவும் இருந்து வந்தார்.
மணிப்பூரில் கடந்த மே 3 அன்று துவங்கிய குக்கி பழங்குடிகள் மீதான மெய்டெய் இனத்தவரின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வால்டே-வை, இதுவரை மணிப்பூர் முதல்வரோ, அமைச்சரோ, பாஜக தலைவர்களோ சந்திக்கவும் இல்லை; நலம் விசாரிக்கவோ இல்லை என்கிறார் அவரது மகன்
ஜோசப். “எனது தந்தை இப்போது ஒரு குழந்தை போல இருக்கிறார். அவருக்கு பேசவும் நடக்கவும் மீண்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். முன்பு, எனது தந்தை மூலமாக எனக்கு மாநில அரசு நிர்வாகத்தில் நிறைய நண்பர்கள் இருந்தனர். ஆனால், இன்று நாங்கள் மாநில அரசுடன் தொடர்பில் இல்லை” என்று கூறும் ஜோசப், தற்போது தாங்கள் கையறு நிலையில் விடப்பட்டுள்ளதாக கண்ணீர் வடித்துள்ளார்.