தாம்பரம், ராஜாஜி ரோடு, ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக முத்து என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார், மணிமண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அதன் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த செந்தில்குமார்(எ) அப்துல்லா(39), கடலூரை சேர்ந்த மணிகண்ணன்(32), என்பதும் தெரியவந்தது. லாட்டரி விற்பனையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முத்துவின் பணத்தை கொடுக்காமல் இருவரும் மிரட்டி வந்ததால் ஒரு கட்டத்தில் முத்துவை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி அவரிடமிருந்த 2000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

அவர்களிடமிருந்து 8 லட்ச ரூபாய் பணம், கார், இருசக்கர வாகனம், செல்போன், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது 341, 294(b), 397, 336, 427, 506(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.