சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்பவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்கும் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் மனைவி 30 வயதுள்ள ராஜேஸ்வரி.

இவர் புறநகர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருபவர். நேற்று இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் ரயிலில் வியாபாரம் செய்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 4 பேர், ராஜேஸ்வரியின் தலை, கழுத்து, முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த ராஜேஸ்வரியை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரயில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ராஜேஸ்வரியை வெட்டிய மர்ம நபர்கள் உருவங்கள் பதிவாகியுள்ளதா என ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, ராஜேஸ்வரி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரி வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.