ஆடி மாதம் சுப காரியங்களை தவிர்க்க வேண்டிய மாதம் என்பார்கள். இது தேவர்களின் இரவு பொழுது என்பதால் அவர்களுக்கான பூஜைகளை ஏற்றுக் கொண்டு ஆசிகளை வழங்குவதற்கு அவர்கள் வர மாட்டார்கள். அதனாலேயே இந்த மாதத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதே சமயம் ஆடி மாதம் வழிபாட்டிற்கு உரிய மிக முக்கியமான புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. அம்மன் அருளையும், முன்னோர்களையும் ஆசியையும் பெற ஏற்ற மாதமாகும்.ஆடி மாதத்தில் பலர் விரதம் இருந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். ஆடி மாதம் துவங்கியது முதல் நிறைவடையும் வரை ஒவ்வொரு நாளையும் சிறப்பாக கொண்டாடுவது இந்துக்களின் வழக்கம். ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு என ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் விரதம் இருந்து நதிகள், மரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சக்தி வடிவமாக பாவித்து வழிபட வேண்டிய மாதமாகும்.மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என பல சிறப்புக்களைக் கொண்ட மாதம் ஆடி மாதமாகும். ஆடி மாதம் துவங்கி அடுத்த 6 மாதங்கள் தேவர்களின் இரவு பொழுதாகும். அதனாலேயே ஆடி மாதத்தில் விசேஷங்கள் நடத்தப்படுவதில்லை.அதில் ஆடி அமாவாசை பித்ரு கடன் நிறைவேற்ற அதிக சிறப்பு வாய்ந்த நாளாகும். வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு தோஷம் முற்றிலுமாக நீங்கி, குடும்பத்தில் நன்மைகள் பல நடக்கும், பித்ருக்களின் ஆசியை முற்றிலுமாக பெற முடியும்.சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதமாகும். சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் நாளே ஆடி அமாவாசை நாளாகும். சந்திரன் தாய் மற்றும் தாய் வழி உறவுகளையும், சூரியன் என்பது தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளையும் குறிப்பதாகும். இவை இரண்டும் ஒரே நாளில் இணைவதால் ஆடி அமாவாசையில் செய்யப்படும் பிதுர் கடன் முன்னோர்களை நேரடியாக சென்றடையும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17 ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18 ம் தேதி வரை உள்ளது. இதில் ஆடி 01 ம் தேதி ஒரு அமாவாசையும், ஆடி 31 ம் தேதி ஒரு அமாவாசையும் வருகிறது. இதனால் எந்த நாளை ஆடி அமாவாசையாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருந்து, முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டு அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பானது என சிலர் சொல்கின்றனர்.ஜூலை 17 ம் தேதி, அதாவது ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசை நாளில் ஜூலை 16 ம் தேதி இரவு 11.05 மணிக்கு துவங்கி, ஜூலை 18 ம் தேதி அதிகாலை 12.30 வரை அமாவாசை திதி உள்ளது. அதாவது ஜூலை 17 ம் தேதி நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 16 ம் தேதியான ஆடி 31 அன்று வரும் அமாவாசை நாளில் ஆகஸ்ட் 15 ம் தேதி பகல் 01.55 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 16 ம் தேதி மாலை 03.50 வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளது. இதனால் ஆஷாட மாதத்தில் வரும் அமாவாசையான ஜூலை 17 ம் தேதி வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாக கருதி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானது என சொல்லப்படுகிறது.