
அனிதா ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் தான் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று கூறியிருந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.
கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அன்றைய திமுக அரசின் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறி தாங்களும் விசாரிக்க வேண்டுமென அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தை நாடியுள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்யும் வெளிநாட்டு பணமோசடி பிரிவு வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீன் கிடைக்காது. ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம். தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவை எதிர்கட்களுக்கு எதிராக, குறிப்பாக திமுக அமைச்சர்கள் மீது மத்திய பாஜக அரசு பயன்படுத்திவருவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.