தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48) திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆட்டோ மொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பணத்தை அளித்தவர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தனி தனியாக கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மகன் மற்றும் மகள் பெற்றோர் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.