சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் முதலில் ரைட் செய்ய ஒப்புக்கொண்டு அதன்பின் கேன்சல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாகவும் பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு முக்கியமான ஒரு விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. நாம் டாக்சி, ஆட்டோ புக் செய்தால், முன்பெல்லாம் நாம் போகும் இடத்தை கேட்டு கேட்டு பின்னர் அதை டிரைவர்கள் கேன்சல் செய்வார்கள். பல நேரங்களில் டிரைவர்கள் நம்மை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டு அதன்பின் கேன்சல் செய்யும் வழக்கம் உள்ளது. இதனால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமயங்களில் டிரைவர்கள் கேன்சல் செய்யும் டிரிப் காரணமாக பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலை கூட ஏற்படும். இந்த நிலையில்தான் சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் முதலில் ரைட் செய்ய ஒப்புக்கொண்டு அதன்பின் கேன்சல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி போக்குவரத்து சட்ட பிரிவு 178 3 பி சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படும். மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் வரை கூட அபராதம் விதிக்கப்படும். ஓலா, உபர் போன்ற நிறுவனங்களிடம் மக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில், அந்த புகார்களை கொண்டு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் இடையே இந்த புதிய விதி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழி விடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.