அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம். சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும். குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.