சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முக்கியமான சில வாதங்களை வைத்துள்ளார்.
இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இரண்டு நீதிபதிகள் மாறி மாறி தீர்ப்பு வழங்கிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிகர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைத்தார்.
அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்தார். இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார்.
அதில், அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.
பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருத்தப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.
கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்..
நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை.
செந்தில் பாலாஜியை சிஆர்பிசி சட்டப்படி கைது செய்ய அமலாக்கத்துறை போலீஸ் கிடையாது. செந்தில் பாலாஜியை கைது செய்யும் வரை என்ன ஆதாரங்கள் இருந்ததோ அது மட்டுமே அவர்கள் கோர்ட்டில் பயன்படுத்த முடியும். கைது செய்யப்பட்ட பின் பிடுங்கப்பட்ட ஆதாரங்களை கோர்ட்டில் பயன்படுத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
அதோடு 24 மணி நேரம் மட்டுமே, அதாவது கோர்ட்டில் ஆஜர் செய்யும் வரை மட்டுமே அமலாக்கத்துறை கஸ்டடியில் வைத்திருக்க முடியும். அதன்பின் நீதிமன்ற காவல் மட்டுமே. , என்று கபில் சிபல் வாதம் வைத்துள்ளார்.