வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.சனிக்கிழமைகளில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளில் வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை – புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி நீச்சம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு தொழில் முடக்கம் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, குலதெய்வ குற்றம் அகலும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு நலம் கிடைக்கும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அகலும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கர்ம வினைதாக்கம் குறையும். தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். முன்னோர்கள் செய்த பாவத்தையும், குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தையும் போக்கும். முந்தைய ஏழு பிறவிகளில் செய்த பாவம், முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமா பாதகங்கள் அழிந்துவிடும். இழப்புகள், விரயங்கள் ஏற்படாது. மனக்கவலைகள், வறுமை நிலை, இயற்கையால் வரும் பாதிப்பு அறவே நீங்கும். மேலும் பலனை அதிகரிக்க அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.