பிச்சை எடுப்பதையே தொழிலாக கொண்ட ஒருவருக்கு, 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா; நம்பித் தான் ஆக வேண்டும்.
மெலிந்த தேகம், வாடி வதங்கிய முகம், ஒட்டிய வயிறு, கந்தல் சட்டை, அழுக்குப் படித்த, வாரப்படாத தலைமுடி ஆகியவை தான், நம் நாட்டில் பிச்சைக்காரர்களுக்கான அடையாளம்.
ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயினின் நிலைமையே வேறு.
இவர், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே, அதிகாலை துவங்கி இரவு வரை பிச்சை எடுத்து வருகிறார்.
பள்ளிக் கூடம் பக்கமே தலைவைத்து படுக்காத இவர், பிச்சை எடுப்பதன் வாயிலாக மாதத்துக்கு, 60,000 – 75,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
தற்போது இவருக்கு, 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவருக்கு இரண்டு படுக்கை அறை உடைய வீடு உள்ளது.
இதன் மதிப்பு, 1.2 கோடி ரூபாய். இதுதவிர, மும்பையில் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
இதிலிருந்தும் இவருக்கு வருவாய் கிடைக்கிறது.
இவரது இரண்டு குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.
இவரது மனைவியும், இவரது சகோதரரும் மும்பையில், ஒரு கடை வைத்து நடத்துகின்றனர். இதிலிருந்தும் இவருக்கு வருமானம் கிடைக்கிறது.
‘பிச்சை எடுத்தது போதும்’ என, உறவினர்கள் வற்புறுத்தினாலும், பாரத் ஜெயின் அதை நிறுத்தியதாக தெரியவில்லை.
மும்பையில், இப்போதும் தெருத்தெருவாக அலைந்து பிச்சை எடுத்து வருகிறார்.
உலகின் பணக்கார பிச்சைக்காரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்து உள்ளது.