மாத உரிமைத்தொகை பெற எந்தெந்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இருக்கிறது என்பது முடிவு செய்யப்படும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காக நியாய விலைக் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு நியாய விலைக் கடைகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை கண்டுபிடித்து தனி பட்டியல் தயாரிக்க உள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்கள் அச்சடித்து முடித்ததும் அவை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை சரி பார்க்க உள்ளனர். அதன்பின் ரேசன் கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படும். அதோடு டோக்கன் ஒன்றும் வழங்கப்படும். அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். நியாய விலைக் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும். பெண்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் போதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு தங்களுக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பெறப்பட்டதும் அவை ஆய்வு செய்யப்படும். மாத உரிமைத் தொகை பெற எந்தெந்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இருக்கிறது என்பது அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஒரு எண் வழங்கப்பட்டு இருக்கும் என்பதால் ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த இயலாது.
அரசே ஒவ்வொரு வீட்டிற்கும் விண்ணப்பத்தை அச்சடித்து கொடுப்பதால் இதில் இடைத்தரகர்கள் செயல்பட முடியாது என்பதுடன், உண்மையான பயனாளிகள் மட்டுமே பயன்பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.