ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கர் பகுதியில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்தது.
▪️இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் குலு நகருக்கு அருகே ஒரு தற்காலிக வீடு சேதமடைந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். சம்பாவின் கட்டியான் தெஹ்சில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிருடன் புதைந்து உயிரிழந்தார்.
▪️கடந்த 36 மணி நேரத்தில் 13 நிலச்சரிவுகளும், 9 திடீர் வெள்ளமும் பதிவாகியுள்ளதாக, மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 3 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 736 சாலைகள் போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளது.
▪️கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஆயிரத்து 743 டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 138 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.