சென்னை -வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை, அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின், 4வது அட்டவணையில், கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை, ஆமைகள் சார்ந்த, 80 வகை உயிரினங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
இந்த உயிரினங்களை, வீடுகளில் வளர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி, வீடுகளில் இந்த உயிரினங்களை வளர்த்தல், இனப்பெருக்கம் செய்தலில் ஈடுபடுவோர், அது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்து, உரிமம் பெற வேண்டும்.
இது குறித்த விபரங்களை, ‘முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம், கிண்டி – வேளச்சேரி பிரதான சாலை, கன்னிகாபுரம் செக்போஸ்ட் அருகில், சென்னை, 600 032 என்ற முகவரிக்கு, வரும் 24க்குள் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர், 044 – 2432 9137 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.