வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது.
இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும்.
வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது இது. இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் பெரும்பாலும் இவை விளைவிக்கப்படுகின்றன. இது பெயருக்கு ஏற்ப கருமை நிறத்தில் காணப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியையும் கொண்டிருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ‘வெள்ளை’ அரிசிக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம். தினமும் கருப்பு கவுனி அரிசியை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏன் என்று இங்கு பார்க்கலாம்.,
இதய ஆரோக்கியம் :கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
புரதச்சத்து :வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் :கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் ‘ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
பக்க விளைவுகள் :கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கருப்பு கவுனி அரிசி ரெசிபி : முதலில் கருப்பு கவுனி அரிசியை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை எடுத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய், 2 நறுக்கிய பூண்டு, 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். பிறகு வேகவைத்த கருப்பு கவுனி அரிசியை இதில் சேர்க்க வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை வதக்கி, பின்னர் எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம். இதனை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.