தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். இதுவரை ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். அதில் சமீப காலமாக மக்கள் அதிகம் உட்கொண்டு வரும் ஒன்றுதான் பிரண்டை.
பிரண்டை ஒரு வற்றாத தாவரம் மற்றும் இது சதைப்பற்றுள்ள ஒரு கொடியாகும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பொதுவாக காணக்கூடியது. பிரட்டையானது நீளமான சதைப்பற்றுள்ள குச்சிகளைப் போன்று காட்சியளிக்கும். ஒவ்வொரு தண்டும் குறைந்தது 4 செ.மீ இடைவெளியில் நாற்கோண வடிவில் இருக்கும். முக்கியமாக இது வேகமாக வளரக்கூடியது.
மார்கெட்டுகளில் இந்த பிரண்டை கட்டு கட்டாக விற்கப்படுவதைக் காணலாம். பிரண்டையைக் கொண்டு என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம். பிரண்டையை துவையல் போன்று அரைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். அதுவும் அடிக்கடி பிரண்டை துவையலை உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது பிரண்டை துவையலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை காண்போம். பிரண்டையில் உள்ள சத்துக்கள் பிரண்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ளன. இது தவிர இதில் கால்சியம் மற்றும் பாஸ்ரஸ் போன்றவை அதிகளவில் உள்ளன. அதோடு பிரண்டையில் ஃப்ளேவோனாய்டுகள், க்யூயர்சிடின், கெம்ப்பெரால், குவாட்ரங்குலரின்கள் ஏ, பி மற்றும் சி, ரிசர்வ்ராட்ரோல், பாலிட், பைசியாடனான் போன்றவை உள்ளன. மேலும் ஆல்பா-அமிரின்கள், பீட்டா-சிட்டோஸ்டெரால், பீனால்கள், டானின்கள் மற்றும் கரோட்டீன் போன்றவையும் உள்ளன.
1. சர்க்கரை நோய்க்கு நல்லது பிரண்டை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, சர்க்கரை நோயால் சந்திக்கும் சிக்கல்களையும் தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட்டை வளர்சிதை மாற்றம் செய்யும் நொதிகளின் செயல்பாட்டை சீராக்கி, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து, இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கலாம்.
2. எடை இழப்புக்கு உதவும் பிரண்டை உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வருபவராயின், தினமும் உடற்பயிற்சிகளை செய்து, ஆரோக்கியமான உணவுகளுடன் பிரண்டையை உட்கொண்டு வந்தால், அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவி புரிகிறது.
3. எலும்புகளுக்கு நல்லது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பிரண்டை எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பிரண்டையை வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம் மற்றும் உட்கொள்ளவும் செய்யலாம். இதனால் அதில் உள்ள அதிகப்படியான பைட்டோ ஈஸ்ட்ரோஜெனிக் ஸ்டெராய்டுகள், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்போன்றவை எலும்பு தொடர்பான பிரச்சனைகளை விரைவில் ஆற்றும். ஆய்வுகளிலும் பிரண்டை எலும்பு இழப்பை குறைக்கவும், எலும்பு முறிவு மற்றும் மூட்டு வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறவும் உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
4. முதுமையைத் தள்ளிப்போடும் பிரண்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. முக்கியமாக பீட்டா கரோட்டீன் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவி புரிந்து, விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.
5. ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கும் பிரண்டையின் முக்கியமான நன்மைகளில் ஒன்று, இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தற்போது நிறைய பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் பிரண்டையை துவையல் செய்து அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் ஆதரவாக இருக்கும்.
6. அல்சரை சரிசெய்யும் தற்போது நிறைய பேர் காலை வேளையில் சாப்பிடாமல் இருந்து, அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உங்களுக்கு அல்சர் பிரச்சனை உள்ளதா? அப்படியானால் பிரண்டை துவையலை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் அதில் உள்ள அல்சர் எதிர்ப்பு பண்புகள் விரைவில் அல்சரை சரிசெய்யும்.
7. மெனோபாஸ் பெண்களுக்கு நல்லது இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்கள் மூட்டு வலி, உடல் சூடு போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள். இதற்கு காரணம் இறுதி மாதவிடாயை நெருங்கும் போது, உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது தான். ஆனால் பிரண்டையை துவையல் செய்து அடிக்கடி சாப்பிடும் போது, அது மெனோபாஸை நெருங்கும் பெண்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளை தடுக்கும்.