ப்ரோக்கோலி காலிஃபிளவர் வகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரோக்கோலியில் ‘சல்போரபேன்’ எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல் ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது.
கண்பார்வை: அதிகம் நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை நெருங்கும் பெரும்பாலான மனிதர்கள் அனைவருக்கும் கண்களில் இருக்கும் ‘மேகுலார்’ திசுக்களின் வளர்ச்சிக் குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் ‘சல்போரலன்’ சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர் காலங்களில் கண்பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன.
இதயம்: இதயப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதானக் காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே ஆகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் ‘ஓமேகா-3’ கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கும்.
எலும்புகள் வலிமைப் பெற: நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது எலும்புகள்தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர் காலங்களில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவுப் போன்ற குறைகள் ஏற்பட காரணமாகிறது. ப்ரோக்கோலியை வாரத்திற்கு 2 முறை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள், பற்கள் போன்றவை வலிமைப் பெறும். மேலும் வைட்டமின் கே சத்து எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து, சிறுநீர் வழியாக வெளியேறுவதையும் தடுக்கிறது.