ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ் என்பவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 08.00 மணி அளவில் ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததை கண்டித்து அண்ணன் ஜனார்த்தனன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் திட்டி கையால் அடித்து விட்டு அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெகதீஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை உள்பக்கம் தாளிட்டு அங்கிருந்த லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்த மாணவனின் அண்ணன் ஜனார்த்தனன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜெகதீஷ் வீட்டில் மற்றொரு அறையில் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கருப்பு நிற லுங்கியால் தனக்குதானே தூக்கிட்டு கொண்டு தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட ஜனார்த்தனன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்துள்ளார். அங்கு மாணவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஜெகதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பல்லாவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய் கண்டித்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.