எப்படி-ன்னு பாருங்க… தற்போது காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் தினசரி சமையலில் சேர்க்கும் தக்காளி, வெங்காயத்தின் விலை போட்டிப் போட்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெங்காயம் ஆகிய இரண்டுமே ஒவ்வொரு சமையலிலும் இடம் பெறும் முக்கியமான உணவுப் பொருட்களாகும். இவ்விரண்டின் விலையும் சாமானிய மக்கள் வாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலரும் தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் சமைத்து பழக வேண்டியிருக்கிறது. என்னது தக்காளி வெங்காயம் இல்லாமல் சமையலா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இப்படியே இவ்விரண்டின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனால், விரைவில் அந்த நிலை தான் ஏற்படும். ஆனால் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் ஒரு அட்டகாசமான சுவையில் சாம்பார் செய்யலாம் தெரியுமா? உங்களுக்கு தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் செய்யும் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: * எண்ணெய் – 2 டீஸ்பூன் * மல்லி – 1 டேபிள் ஸ்பூன் * சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன் * கடலைப்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் * உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் * வெந்தயம் – 1/4 டீஸ்பூன் * கறிவேப்பிலை – சிறிது * வரமிளகாய் – 4 * துருவிய தேங்காய் – 1/2 கப் * தண்ணீர் – தேவையான அளவு சாம்பாருக்கு… * எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * சுரைக்காய் – சிறிது (துண்டுகளாக்கப்பட்டது) * மஞ்சள் பூசணி – சிறிது (துண்டுகளாக்கப்பட்டது) * பீன்ஸ் – 5 (நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) * கத்திரிக்காய் – 2 (துண்டுகளாக்கப்பட்டது) * முருங்கைக்காய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது) * தண்ணீர் – 5 கப் * கறிவேப்பிலை – சிறிது * மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் * வெல்லம் – 1/2 டீஸ்பூன் * புளிச்சாறு – 3/4 கப் * உப்பு – சுவைக்கேற்ப * துவரம் பருப்பு – 1 கப் தாளிப்பதற்கு… * எண்ணெய் – 3 டீஸ்பூன் * கடுகு – 1 டீஸ்பூன் * வரமிளகாய் – 2 * கறிவேப்பிலை – சிறிது செய்முறை: * முதலில் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மல்லி, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தைப் போட்டு குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். * பின் அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்டுள்ள சுரைக்காய், மஞ்சள் பூசணி, பீன்ஸ், முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து, காய்கறிகளை நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும். * பிறகு அதில் 5 கப் நீரை ஊற்றி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும். * காய்கறிகள் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, புளிச்சாற்றினை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். * பின் அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, மீண்டும் 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். * இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். * பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்த கிளறினால், சாம்பார் தயார்.