
கோடை விடுமுறை முடிந்து, குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துவிட்டன. மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை ஆற்றும் வகையில் ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் ரெசிபி நிச்சயம் குழந்தைகளின் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சுவையாக இருப்பதோடு தவிர, பசியையும் தணிக்கும். மேலும் இது செய்வது மிகவும் சுலபம். 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.
உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: * பன்னீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கப்பட்டது) * பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) * குடைமிளகாய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது) * பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது) * இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) * பச்சை மிளகாய் – 3 (இரண்டாக வெட்டியது) * உப்பு – சுவைக்கேற்ப * சர்க்கரை – 1 டீஸ்பூன் * தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன் * ரெட் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் * சோயா சாஸ் – 2 டீஸ்பூன் * வினிகர் – 1 டீஸ்பூன் * மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் * ஸ்பிரிங் ஆனியன் – ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது) * எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பன்னீர் கோட்டிங்கிற்கு… * மைதா – 3 டேபிள் ஸ்பூன் * சோள மாவு – 6 டேபிள் ஸ்பூன் * பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன் * உப்பு – சுவைக்கேற்ப * மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் * சோயா சாஸ் – 1 டீஸ்பூன் * தண்ணீர் – தேவையான அளவு * எண்ணெய் – 2 கப் (பொரிப்பதற்கு) செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். * எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பௌலில் கோட்டிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். * எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, கலந்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு பௌலில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். * பின் அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். * அடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, மிளகாய் தூள் மற்றும் ஒன்றாக கலந்து வைத்துள்ள சாஸ்களை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். * பின்பு பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும். உங்களுக்கு ட்ரையாக வேண்டுமானால், நீர் வற்றும் வரை கிளற வேண்டும். அதுவே கிரேவியாக வேண்டுமானால், சற்று நீராக இருக்கும் போதே இறக்கி, மேலே ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து கிளறினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் தயார்.