நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் சிக்கனை வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சிக்கனை சமைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் சிக்கன் குருமாவை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் குருமா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.சேலம் ஸ்டைல் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் ஸ்டைல் சிக்கன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * சிக்கன் – 300 கிராம் * வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) * தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) * மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் * இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் * கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது) * உப்பு – சுவைக்கேற்ப வறுத்து அரைப்பதற்கு… * பட்டை – 1 இன்ச் * கிராம்பு – 2 * சோம்பு – 1/2 டீஸ்பூன் * மிளகு – 1/2 டீஸ்பூன் * கறிவேப்பிலை – சிறிது * மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன் * வரமிளகாய் – 6-7 * துருவிய தேங்காய் – 1/2 கப். தாளிப்பதற்கு… * சோம்பு – 1/2 டீஸ்பூன் * மிளகு – 1/2 டீஸ்பூன் * கறிவேப்பிலை – சிறிது * எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: * முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களுள் தேங்காயை தவிர மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். * பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் தேங்காயை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * பிறகு அதில் தக்காளியை சேர்த்து சில நிமிடங்கள் மென்மையாகும் வரை வதக்கி, அதன் பின் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும். * சிக்கன் நன்கு நீர் விட்டு சுண்டியதும், அதில் மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சேலம் ஸ்டைல் சிக்கன் குருமா தயார்.
குறிப்பு: * இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் போது, இஞ்சி மற்றும் பூண்டை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். * மசாலா பொருட்களை வறுக்கும் போது, அது கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து பொருட்களை ரோஸ்ட் செய்யுங்கள். * கிரேவிக்கு தேங்காய் விழுதை அரைக்கும் போது, அந்த விழுதை மென்மையாக அரைக்க வேண்டும். * வாணலியில் குருமாவை வைப்பதாக இருந்தால், சிக்கனை வேக வைக்க 25-30 நிமிடம் ஆகும்.