தாம்பரத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மேற்கு தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல தனியார் ஷோரூம் (சத்யா ஏஜென்சிஸ்) உள்ளது.
இங்கு சுரேஷ்பாபு (53) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த மாதம் 3ம் தேதி ஷோரூமில் பணியில் இருந்த போது வெங்கடபதி என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்யா ஏஜென்ஸியின் உரிமையாளர் தனக்கு தெரியும் எனக்கூறி ரூ.12,00,000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்ததின் பேரில் மகாலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி என்ற முகவரியில் பொருட்களை டெலிவரி செய்துள்ளார்.
பொருளுக்கான தொகை ரூ.12,00,000க்கான காசோலையை வெங்கடபதி கொடுத்துள்ளார்.
அதை சுரேஷ்பாபு வங்கியில் மாற்ற முயன்ற போது அந்த காசோலையில் பணம் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொருட்களை டெலிவரி செய்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சுரேஷ்பாபு சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஷகிலா மற்றும் தனிப்படையினர் வெங்கடபதியை உடைந்தையாக இருந்த சரவணன்
என்பவரையும் போலீசார் கைது செய்து ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுஉபயோக பொருட்களையும் மற்றும் பொருட்களை விற்ற பணம் ரூபாய் இரண்டு லட்சத்து முப்பது ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் வெங்கடபதி மீது பல்வேறு காவல் நிலையங்களில் இதே போன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.