சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் ராம் ராஜேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் குரோம்பேட்டையில் உள்ள மகேந்திரா ஷோரூமில் ரூ.21 லட்சம் மதிப்புடைய மகேந்திரா எக்ஸ்.யூ.வி. என்ற பேட்டரி காரை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வாங்கி உள்ளார். இந்தநிலையில் 3 மாதத்தில் 3 முறை காரில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார் நின்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை ராம் ராஜேஷ் தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக காரை எடுத்து கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில் மீண்டும் நின்று விட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மகேந்திரா சோரூம் மற்றும் சர்வீஸ் செண்டரில் புகார் அளித்தும் காரை 6 மணி நேரத்திற்கு பின்னரே எடுக்க வந்துள்ளனர்.
இதனால் கடுமையாக மன உளைச்சலில் ஆளான ராம் ராஜேஷ் இன்று குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூமில் சென்று புகார் அளித்தபோதும் சரியாக பதிலளிக்கதால் ராம் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஷோரூம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராம் ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, 3 மாதமாக கடுமையான மன உளைஞ்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், மாதம் 33 ஆயிரம் இ.எம்.ஐ. கட்டும் சூழ்நிலையில் இந்த வண்டியை வாங்கி ஏமார்ந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் காரை விற்பனை செய்யும் நோக்கத்தில் பல பொய்களை கூறி காரை விற்பனை செயத்தாக குற்றம் சாட்டினார்.