மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நைமிசாரண்யம் என்ற திருத்தலம். இது மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
எட்டு சுயம் வ்யக்த ஷேத்திரங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. ஒன்பது தபோவனங்களில் ஒன்றாகவும் வழிபடப்படுகிறது. நைமிசாரண்யம் என்னும் இந்த தலத்தில் இருந்துதான், சூத முனிவர் என்பவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு இதிகாசங்களை, சவுனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நேமி’ என்பதற்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்று பொருள். ‘ஆரண்யம்’ என்றால் காடு. நேமி சார்ந்த ஆரண்யம் என்பதே ‘நைமிசாரண்யம்’ என்று ஆனதாக சொல்கிறார்கள்.
ஒரு முறை சவுனகர் தலைமையிலான தவ வலிமையில் சிறந்த முனிவர்கள் பலரும் கூடி, 12 ஆண்டுகள் செய்யக்கூடிய சந்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து தரும்படி பிரம்மனிடம் கேட்டனர். உடனே பிரம்மதேவன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக செய்து, பூமியை நோக்கி உருட்டி விட்டார். அது விழுந்த இடத்தில் தவம் செய்யுங்கள் என்றார். அதுவே நைமிசாரண்யம் பகுதி என்கிறது தல வரலாறு.
இங்கே வேள்வி நடத்திய முனிவர்கள், அந்த வேள்விக்கான முழு பலனையும் மகாவிஷ்ணுவிற்கே கொடுக்க நினைத்தனர். அதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தனர். அதன்படி வேள்வியின் இறுதியில், குண்டத்தில் இருந்து எழுந்தருளிய மகாவிஷ்ணு அவிர் பாகத்தைப் பெற்று முனிவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த இடத்தில்தான் ராவணனை வதம் செய்த பிறகு ராமபிரான், அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினார்.
6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 4 வேதங்கள் ஆகியவற்றை வேத வியாசர் வழங்கியதும் இங்கிருந்துதான். கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் ஆகியோர் இங்கே வருகை புரிந்துள்ளனர். துளசிதாசர், ‘ராமசரித மானஸ்’ எழுதியதும் இங்கு வைத்துதான். நைமிசாரண்யம் திருத்தலம் அமைந்த பகுதியைச் சுற்றி உள்ள 16 கிலோமீட்டர் தூரமும் புனித பூமியாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர். இங்கு வனம் என்னும் இயற்கையே வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது.
தற்போதுள்ள சன்னிதியிலும் ஆழ்வார்கள் பாடிய மூர்த்திகள் இல்லை. இங்கே சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. கோமதி நதிக்கு ‘ஆதிகங்கை’ என்றும் பெயர். இந்த நதிதான் பிரம்மதேவனால், பூமியில் முதன் முதலாக படைக்கப்பட்ட நதி என்கிறது புராணங்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்கர தீர்த்தத்தில் நீராடுவதே மரபு. அமாவாசை அன்று சக்கர தீர்த்தத்தில் நீராடினால், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஏனெனில் இந்த சக்கர தீர்த்தம், 14 உலகங்களிலும் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்கிறார்கள்.