தேவையானவை: இட்லி – 5, கடலைமாவு – சிறிதளவு, மிளகாய்தூள் – சிறிதளவு, பெரிய வெங்காயம் -1, தக்காளி -1, உப்பு – சுவைக்கேற்ப, சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி- பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு. செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் சாறாக அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும். இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பிறகு, வேறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வெங்காயத் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால், அதுதான் சுவையான ‘இட்லி 65’. இதன் நிறமும் மணமும் பார்ப்பவரை உண்ணத் தூண்டும்.