
ஹராரே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் தோல்வி கண்டு மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியுள்ளது.
தகுதி சுற்றில் இன்று நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் களமிறங்கிய அந்த அணி, 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி, 45 ரன்கள் எடுத்திருந்தார்.
ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பு மற்றும் 6.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ஸ்காட்லாந்து வீரர்கள் மேட் கிராஸ் (107 பந்துகளில் 74 நாட் அவுட்), பிரண்டன் மெக்முல்லன் (106 பந்துகளில் 69) ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் 10 அணிகளில் இடம்பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு முறை (1975 மற்றும் 1979) சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இல்லாமல் நடைபெறபோகும் முதல் உலகக்கோப்பையாக இது அமையப்போகிறது.
தகுதி சுற்று ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி, அமெரிக்காவை (35 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் நேபாளத்தை (101 ரன்கள் வித்தியாசத்தில்) தோற்கடித்து இருந்தாலும்,
ஜிம்பாப்வேயிடம் தோல்வி, சூப்பர் ஓவர் எலிமினேட்டர் முறையில் நெதர்லாந்திடம் தோல்வி என்று, மற்ற அணிகளை விடக் குறைவான புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் இல்லாமலே சூப்பர் சிக்ஸ் சுற்றில் நுழைந்தது. தற்போது ஸ்காட்லாந்திடமும் தோல்வி கண்டதன்மூலம் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.