திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் (2ம்தேதி) இரவு 7.45 மணிக்கு தொடங்கி, 3ம்தேதி மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வழக்கத்தைவிட கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பவுர்ணமியில் இருந்து முதன்முறையாக சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
அதன்படி நாளை (2ம்தேதி) இரவு 9.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். நாளை மறுதினம் (3ம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, காலை 5.35 மணிக்கு வேலூர் கண்ட்டோன்மென்ட் சென்றடையும். அதேபோல், விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும். அதைத்தொடர்ந்து, பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
மேலும், விழுப்புரத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். அதைத்தொடர்ந்து, 3ம்தேதி அதிகாலை 3.30 மணிக்கு காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்நிலையில், வேலூர் கண்ட்டோன்மென்ட் செல்லும் சிறப்பு ரயில், அங்கிருந்து தொடர்ச்சியாக சென்னை பீச் ஸ்டேஷன் வரை செல்லவும், விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு ரயில் அங்கிருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.