சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://ncet.samarth.ac.in இணையதளம் வழியாக ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நாடு முழுவதும் 34 உதவி மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்டிஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு சென்று இலவசமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Company logo
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 20, 21-ல் அவகாசம் வழங்கப்படும். தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால் டிக்கெட் வெளியீடு,விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்