தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் பொறுப்பேற்றார்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற்றதையொட்டி, அந்த பணியிடத்துக்கு சங்கா் ஜிவால் நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா்.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக தற்போது பொறுப்பேற்றார்.

புதிய தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு.

சங்கா் ஜிவால் கடந்து வந்த பாதை: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ஜிவால். பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான இவா், கடந்த 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக காவல் துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா்.

சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். மேலும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல இயக்குநா், திருச்சி மாநகர காவல் ஆணையா், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா்.

சிறந்த காவல் பணிக்காக கடந்த 2007, 2019-ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவா் பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளாா்.

வெள்ளிக்கிழமை மாலையில் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சி.சைலேந்திரபாபுக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.