குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் ரேணி குண்டா ரெயில் நிலையத்தில் ஏறி சென்னை வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார். மனைவி, பிள்ளைகள் ஊனமுற்றோர் பெட்டியில் ஏறியுள்ளனர். ரெயில் வியாசர்பாடியை கடந்து மெதுவாக வரும் போது ஒரு வாலிபர் ஊன முற்றோர் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி சரண்யா விடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் கொள்ளையன் ஷாஜகானை (25) கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறி செய்த நகைகள் குறித்து கேட்டனர். திருடிய நகைகளை பாஸ்கரன் (29), லாரன்ஸ் (24), தங்கபாண்டி (27) ஆகியோரிடம் காட்டி விற்க முயன்றபோது நகைகளை தன்னிடம் இருந்து திருடி சென்றதாக ஷாஜகான் தெரிவித்தார். தனக்கு மது வாங்கி கொடுத்து போதையில் இருந்தபோது நகைகளை திருடி சென்றதாக அவர் கூறியதை தொடர்ந்து 3 பேரையும் பிடிக்க போலீசார் ‘பொறி’ வைத்தனர்.அவர்களிடம் இருந்து 2 செயின் மற்றும் மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.